செய்திகள்
ஆம்பூர் பெத்லகேம் பகுதிக்கு செல்லும் ரெயில்வே குகை பாதை வழியாக கனிமொழி எம்.பி. நடந்து சென்ற காட்சி.

தேர்தலுக்காக அவசர கோலத்தில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார்- கனிமொழி குற்றச்சாட்டு

Published On 2021-02-28 14:51 GMT   |   Update On 2021-02-28 14:51 GMT
தேர்தலுக்காக அவசர கோலத்தில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
ஆம்பூர்:

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு வந்த தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ஆம்பூர் பெத்லகேம் பகுதிக்கு செல்லும் ரெயில்வே குகை வழிப்பாதை வழியாக நடந்து சென்று அந்த பகுதியை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 110 விதியின் கீழ் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை ஆம்பூர் பெத்லகேம் ரெயில்வே மேம்பால பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சேறும், சகதியுமாக உள்ள இப்பகுதியில் நடப்பதற்கே முடியாமல் உள்ளது.

அ.தி.மு.க. அரசின் அறிவிப்புகள் அனைத்தும் கிடப்பில் தான் உள்ளது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் எதிலும் உண்மையில்லை. அவை அனைத்தும் கிடப்பில் உள்ளது. தேர்தல் அறிவிப்பு வரக்கூடிய நேரத்தில் பல அறிவிப்புகளை சில நாட்களாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அவை அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்டவை தான்.

நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பால் மகளிருடைய வாக்கு அ.தி.மு.க.விற்கு போகாது. ஏனெனில் பெண்கள் தெளிவாக இருக்கிறார்கள். மகளிர் குழுக்களை கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமலேயே வைத்திருக்கின்றனர். காவல் துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சியில் மகளிருக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது பெண்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.ரகோத்தமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக அகரம்சேரி பகுதியில் கனிமொழி எம்.பி. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாய் தயாரிக்கும் தொழிலாளர்கள், பாய் நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து மாதனூர் ஒன்றியம் ஜமீன் கிராமத்தில் கரும்பு விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுடைய எந்த பிரச்சினையையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. கரும்பு விவசாயிகள் கேட்ட கரும்பு ஆதார விலையை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை கூட ஆட்சியாளர்கள் கேட்கவில்லை. தற்போது கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாமலேயே உள்ளது. ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பட வைக்க தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து விவசாயம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தொழில் தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்பென்னை - பாலாறு இணைப்பு திட்டம் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்ற உறுதியாக நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஏற்க மாட்டோம். தொடர்ந்து தி.மு.க. எதிர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார். 

ஆம்பூர் தொகுதியில் பிரசாரம் முடித்த கனிமொழி ஆம்பூரில் உள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் கட்சியினருடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார்.
Tags:    

Similar News