செய்திகள்
கோப்புப்படம்

பள்ளிகொண்டா அருகே 3 அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல்

Published On 2021-02-26 15:42 IST   |   Update On 2021-02-26 15:42:00 IST
பள்ளிகொண்டா அருகே நள்ளிரவில் 3 அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அணைக்கட்டு:

வேலூரிலிருந்து பேரணாம்பட்டு, சேலம், ஓசூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு அரசு பஸ்கள் புறப்பட்டு சென்றனர்.

இரவு 11.40 மணி அளவில் பள்ளிகொண்டா அருகே கந்தன் ஏரி பகுதியில் அடுத்தடுத்து 3 அரசு பஸ்கள் சென்று கொண்டிருந்தன.

சேலம் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திடீரென மர்மநபர்கள் சாலையின் குறுக்கே வந்து பஸ் மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

அதேபோல் பேரணாம்பட்டு, ஓசூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்த அரசு பஸ்கள் மீது கல்வீசினர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்கள் பஸ்களை நடுவழியில் நிறுத்தினர். பயணிகள் இறங்கி கல்வீசியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் இருட்டில் ஓடி தப்பிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News