செய்திகள்
ரங்காபுரம் மலையில் மீண்டும் தீ

ரங்காபுரம் மலையில் மீண்டும் தீ- சமூக விரோதிகள் அட்டூழியம்

Published On 2021-02-26 12:33 IST   |   Update On 2021-02-26 12:33:00 IST
மலைகளுக்கு தீ வைத்து அட்டூழியம் செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரங்காபுரம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
வேலூர்:

வேலூர் மாநகரை சுற்றிலும் சிறிய அளவிலான மலைகள் ஏராளமாக காணப்படுகின்றன. கோடைக்காலத்தில் இந்த மலைகளில் காணப்படும் செடி, கொடி, புற்கள் வெயில் வெப்பத்தினால் காய்ந்து விடும். அவற்றை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தும் சம்பவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதனை தடுக்க வனத்துறையினர் போலீசார் எடுத்தமுயற்சிகள் எதுவும் கை கொடுக்கவில்லை.

இந்தாண்டு கோடைக்காலம் தொடங்கும் முன்பே கடந்த 20-ந் தேதி மாலை ரங்காபுரம் மலையில் உள்ள செடி, புற்களை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் மலைகளில் தீ வைப்பதை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் ரங்காபுரம் மலையில் சமூக விரோதிகள் தீ வைத்துள்ளனர். செடி, கொடி, புற்கள் தீப்பற்றி மளமளவென்று எரிந்தது. அதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. தகவலறிந்த வேலூர் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மலைகளுக்கு தீ வைத்து அட்டூழியம் செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரங்காபுரம் பகுதிமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Similar News