செய்திகள்
விஜயவேணி எம்எல்ஏ

என் உயிர் உள்ளவரை காங்கிரசில் நீடிப்பேன்- விஜயவேணி

Published On 2021-02-21 06:10 GMT   |   Update On 2021-02-21 06:10 GMT
என் உயிர் உள்ளவரை காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன் என்று விஜயவேணி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சமபலத்தில் உள்ளனர்.

ஆளுங்கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்களும், எதிர்கட்சிகளுக்கு நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்பட 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதனால் புதுவை அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்றும், சட்டசபையை உடனே கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகையில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இந்தநிலையில் புதிய கவர்னராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன் நாளை (திங்கட்கிழமை) சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நாராயணசாமிக்கு உத்தரவிட்டார். அதன்படி நாளை சட்டசபை கூடுகிறது.

இந்தநிலையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயவேணி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இதனை விஜயவேணி எம்.எல்.ஏ. மறுத்தார். இதுகுறித்து அவரிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

என் உயிர் உள்ளவரை காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன். முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எனது ஆதரவு என்றும் தொடரும். ராகுல்காந்திக்கும், சோனியாகாந்திக்கும் நான் களங்கம் விளைவிக்க மாட்டேன். தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் வதந்தியாகும். இதனை யாரும் நம்பவேண்டாம். காங்கிரசிலே தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News