செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என குறிப்பிட்டது வரலாற்று பிழை: கவர்னருக்கு நாராயணசாமி கடிதம்

Published On 2021-02-20 08:25 GMT   |   Update On 2021-02-20 08:25 GMT
நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என குறிப்பிட்டது குறித்து கவர்னரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின் முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

கவர்னர் தமிழிசை மெஜாரிட்டியை நிரூபிக்க அளித்த கடிதத்தில் நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவை பதிவேட்டில் நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என குறிப்பிடவில்லை.

நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை. எனக்கு அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இதுபற்றி எனக்கு விளக்கம் தர கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

கட்சி மாறும் தடை சட்டத்திலுள்ள பிரிவொன்றில், நியமன எம்.எல்.ஏ.க்களாகி 6 மாதத்துக்குள் கட்சியின் பெயரை சேர்க்க உரிமை உண்டு. சேராவிட்டால் அவர் கட்சி சாராத நியமன எம்.எல்.ஏ.தான்.

தமிழிசை மிகப்பெரிய வரலாற்று பிழை செய்துள்ளார். அதனால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி உள்ளேன். இது பற்றி சபாநாயகரிடமும் பேசுவேன். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இதில், சட்டசபையில் எவ்வாறு செயல்படுவது என முடிவெடுப்போம்.

சமூக ஊடங்களில் நான் ராகுலிடம் பொய் கூறியதாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதை காங்கிரசில் இருந்து வெளியேறியவர்களும், பா.ஜனதாவினரும்தான் செய்கிறார்கள்.

உண்மையில் நிவர் புயலின் போது சோலை நகரில் படகுகளை கிரேன் மூலம் இடம் மாற்றி வைத்தோம். அதற்கான ஆதாரம் உள்ளது. என்னிடம் மோத வேண்டுமானால் நேரடியாக மோத வேண்டும். அதற்கு நான் தயார். முதுகில் குத்தக் கூடாது.

நான் புயல் சமயத்தில் கூட்டம் நடந்த இடத்துக்கு வந்ததைத்தான் ராகுலிடம் கூறினேன். சமூக வலைத் தளத்தில் என் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News