செய்திகள்
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படையினரை படத்தில் காணலாம்.

காரைக்கால் அருகே நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இந்திய கடல்படை

Published On 2021-02-19 10:28 GMT   |   Update On 2021-02-19 10:28 GMT
காரைக்கால் அருகே நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இந்திய கடல்படையினர் மீட்டனர்.
காரைக்கால்:

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் விசை படகுகளில் அந்தமான் சென்று மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சின்னசாமி, செல்வநாதன், கோகுல்ராஜ், முனியசாமி, ஜேம்ஸ், சரவணன் ஆகியோர் அந்தமான் பகுதிக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்களின் ஒரு படகை பழுதுபார்க்க சென்றனர்.

அந்தமானில் படகினை பழுதுபார்த்துவிட்டு 6 மீனவர்களும் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் நோக்கி படகில் புறப்பட்டனர். இந்த படகு காரைக்கால் அருகே 25 நாட்டிக்கல் தூரத்தில் வந்தபோது திடீரென பழுது ஏற்பட்டது.

இதனால் ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் நடுக்கடலில் இரவு முழுவதும் தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சிறிய கப்பல் வந்தது. இதனை பார்த்ததும் கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் இந்திய தேசியகொடியை அசைத்து சைகை காட்டினர்.

உடனடியாக அந்த கப்பல் படகைநோக்கி சென்றது. அப்போது தான் அந்த மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினர் என அறிந்தனர். நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மற்றும் படகினை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் ராமேசுவரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News