செய்திகள்
சாமிநாதன், நமச்சிவாயம்

மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைகின்றனர்- சாமிநாதன், நமச்சிவாயம் தகவல்

Published On 2021-02-19 10:21 GMT   |   Update On 2021-02-19 10:21 GMT
மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைகின்றனர் என்று சாமிநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி வரும் 25-ந் தேதி புதுவைக்கு வருகிறார். அன்றைய தினம் அரசு விழாவிலும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

காலை 11 மணிக்கு ரோடியர் மில் திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் கட்சி வித்தியாசமின்றி புதுவையை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. வழக்கமாக கட்சி தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கட்சித்தலைமை என அனைவரையும் நாராயணசாமி ஏமாற்றியே பழக்கப்பட்டவர்.

சமீபத்தில்கூட கட்சித் தலைவர் வந்திருந்தபோது, மக்கள் முன்னிலையிலேயே ஏமாற்றினார். இப்படிப்பட்டவர் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்க தகுதி இல்லை என்கிறார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக பேசுகிறாரா? சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை எதிர்க்கிறாரா? என தெளிவாக கூற வேண்டும். 15 நாட்களுக்கு முன்பு வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கூட, நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளார்.

புதுவை முதல்-அமைச்சர் அரசியல்கட்சி தலைவர்களையும், மக்களையும் முட்டாளாக்க நினைக்கிறார். சட்டமன்றத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் கண்டிப்பாக, நிச்சயமாக வாக்களிப்பார்கள்.

ஓரிருநாளில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளனர். யாரையும் கட்டாயப் படுத்தியோ, மிரட்டியோ சேர்க்க வில்லை. காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பதால் அந்த கட்சியை விட்டு விலகி வருகின்றனர். யாரையாவது மிரட்டி, கட்டாயப்படுத்தியிருந்தால் புகார் தரலாம். நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா என குறிப்பிட்டது தவறு என காங்கிரசார் கூறி வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டாக புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்தது யார்? நாஜிம், கேசவன், அண்ணாமலை ரெட்டியார், நாரா கலைநாதன், பாத்திமாபீவி என பலரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்தான் எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர். அவர்கள் அரசியல் கட்சியிலும் செயல்பட்டனர். சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவினர் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டுகிறார். பா.ஜனதா எந்த ஆட்சியையும் கவிழ்த்து இல்லை. நாடு முழுவதும் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பல மாநில ஆட்சிகளை காங்கிரஸ்தான் கவிழ்த்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியே வருவதால்தான் ஆட்சி கவிழ்கிறது. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க முடியாத முதல்- அமைச்சர் மற்றவர் மீது குற்றம்சாட்டி வருகிறார். நாராயணசாமியை பொறுத்தவரை மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக கொண்டவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அவர்களிடம் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும் பான்மையை இழந்தால் பா.ஜனதா ஆட்சி அமைக்குமா? என கேட்ட போது, பா.ஜனதா கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைமையும் இணைந்து முடிவு செய்யும் என பதில் அளித்தனர்.

Tags:    

Similar News