செய்திகள்
விருதுநகரில் டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்த போது எடுத்த படம்.

கலப்பட மருத்துவ முறையை மத்திய அரசு அனுமதிக்க கூடாது - இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்

Published On 2021-02-15 18:25 IST   |   Update On 2021-02-15 18:25:00 IST
கலப்பட மருத்துவ முறையை மத்திய அரசு அனுமதிக்க கூடாது என இந்திய மருத்துவ சங்கமும், பல் மருத்துவர் சங்கமும் வலியுறுத்தி உள்ளது.
விருதுநகர்:

மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன மருத்துவ முறையில் அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஒரே நாடு, ஒரே மருத்துவ முறை என்ற முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பு என்ற பெயரில் கலப்பட மருத்துவ முறையினை உருவாக்க சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.

மேலும் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ கல்வியில் பக்கவாட்டு நுழைவு நடை முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முயற்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆங்கில மருத்துவ முறையை மேற்கத்திய மருத்துவ முறை மற்றும் கிறிஸ்தவ மருத்துவ முறை என்ற தவறான நம்பிக்கை ஆட்சியாளரிடம் உள்ளது. மேலும் பல்வேறு மருத்துவமுறைகள் ்இருக்கின்றன என்று கூறிக்கொண்டே காலாவதியான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வழக்கொழிந்த மருத்துவமுறைகளை வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு அதை அமல்படுத்த முயற்சிப்பது சரியல்ல.

மேலும் ஆயுர்வேத மருத்துவ முறையில் பக்கவிளைவில்லாதது, நவீன மருத்துவம், பக்கவிளைவை உள்ளது என்றெல்லாம் கூறப்படும் நிலையில் தற்போது அதனை பின்பற்ற முயற்சிப்பது ஏன் என்று தெரியவில்லை.

எனவே மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன அறிவியல் மருத்துவ முறைப்படி அறுவை சிகிச்சைகளை செய்ய அனுமதிக்கும் அறிவிப்பை ரத்து செய்யவும் கலப்பட மருத்துவ முறையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களை கலைக்கவும் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மருத்துவக் கல்வியில் பக்கவாட்டுநுழைவு நடைமுறையை கைவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி முன்பு விருதுநகர் மாவட்ட மருத்துவர் மற்றும் பல்மருத்துவர் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தினை தென் மண்டல துணைத்தலைவர் டாக்டர் தனபால் தொடங்கி வைத்தார். டாக்டர் போஸ், டாக்டர் ஜவகர் லால், டாக்டர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இப்போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் ஆகியோர் பேசினர். முடிவில் வெங்கடசுப்ரமணியன் நன்றி கூறினார். போராட்டத்தில் திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News