செய்திகள்
வெடி விபத்தில் பலியான பாக்கியராஜ்-செல்வி மற்றும் பெற்றோரை இழந்து கதறிய சிறுமி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஒரே நாளில் தாய், தந்தையை பறிகொடுத்த சிறுமி

Published On 2021-02-14 03:24 GMT   |   Update On 2021-02-14 03:24 GMT
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தனது பெற்றோரை சிறுமி பறிகொடுத்துள்ளார். துக்கம் தாங்காமல் அவள் கதறியதால் ஆஸ்பத்திரியே சோகமயமாகியது.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் நடுசூரங்குடியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 48), அவரது மனைவி செல்வி (40) ஆகியோரும் உயிரிழந்தனர்.

அந்த தம்பதியினர் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். தனித்தனி அறைகளில் வேலை செய்தனர்.

முதலில் வெடி விபத்து ஏற்பட்ட அறையில்தான் செல்வி பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த பாக்கியராஜ், தனது மனைவியை பார்க்க அவர் பணியாற்றிய அறையை நோக்கி ஓடி வந்துள்ளார்.

அப்போது அந்த பகுதியில் இருந்த மற்றொரு பட்டாசு அறை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் சிக்கிய பாக்கியராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதற்கிடையே அவருடைய மனைவி செல்வியும் உடல் கருகி உயிருக்கு போராடினார்.

மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பாக்கியராஜை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதே போல் செல்வி சிவகாசி அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரும் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல்கள் அவர்களுடைய உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பாக்கியராஜ், செல்வி தம்பதிக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் கழித்துதான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மகளுக்கு நந்தினி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற்போது நந்தினி புதுசூரங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

ஒரே நாளில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெற்றோரை இழந்த சிறுமி நந்தினி, துக்கம் தாங்காமல் கதறினாள். நேற்று சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவளிடம் உறவினர்கள் ஆறுதலாக பேசியும் அவளை தேற்ற முடியவில்லை. சிறுமியின் கதறல் ஆஸ்பத்திரியில் இருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது. ஆஸ்பத்திரியையே சோகமயமாக்கியது.

பிரேத பரிசோதனை முடிந்து செல்வியின் உடலை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்திலேயே சிறுமி நந்தினியும் அழைத்துச் செல்லப்பட்டாள்.
Tags:    

Similar News