செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஆரணியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2021-02-11 10:33 GMT   |   Update On 2021-02-11 10:33 GMT
ஆரணியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:

ஆரணி நகரில் 33 வார்டுகள் உள்ளன. அதில் 1-வது வார்டு முதல் 18-வது வார்டுகள் வரை துப்புரவுப் பணிகளை தனியார் மேற்கொண்டு வருகின்றனர். மீதமுள்ள 19-வது வார்டு முதல் 33-வது வார்டு வரை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் 18 வார்டுகள் வரை செய்யப்படுகிற துப்புரவு பணியாளர்களின் பணிகள் வீடுகளில் குப்பைகளை வாங்குவது மட்டுமே. ஆனால் பக்க கால்வாய்களிலும், சிறு பாலங்களிலும் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றுவதில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்வாய்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.

மேலும் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட குப்பை கிடங்கு வசதி இல்லாததால் கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியிலும், ஆரணி-முள்ளிப்பட்டு-சேவூர் பைபாஸ் சாலையிலும், பழைய ஆற்காடு சாலையில் உள்ள ஆற்றுப் பகுதியிலும், ஆரணி- வந்தவாசி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கமிட்டி வளாகம் அருகிலும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இதனால் குப்பைகள் அதிகளவில் சேரும்போது, துப்புரவு பணியாளர்கள் அவர்களாகவே அங்குள்ள குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இதனால் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். துர்நாற்றம் வீசும் காற்று, நச்சுப்புகையால் மூச்சுத்திணறல், உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆரணி நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரணி-வந்தவாசி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கமிட்டி அருகில் வசித்து வரும் பொதுமக்களும், பல்வேறு பகுதி மக்களும் சேர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஆரணி டவுன் வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுதொடர்பாக ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜிடமும் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, குப்பைகள் எரிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து, குப்பைகளை அங்குக் கொட்டாமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News