செய்திகள்
கைது

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து விற்ற வாலிபர் கைது

Published On 2021-01-05 10:45 GMT   |   Update On 2021-01-05 10:45 GMT
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியில் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து ஓட்டல்கள் மற்றும் அரிசி மண்டிகளுக்கு விற்பனை செய்வதாக, சேலம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கோபி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் தலைமையிலான குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள ஒரு வீட்டில், ரகசியமாக ரைஸ் மில் இயங்குவதும், அங்கு ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து ஓட்டல்கள் மற்றும் அரிசி மண்டிகளுக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் பாலாஜி (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, பாலிஷ் போட்டு ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.52 வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2,500 கிலோ அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News