செய்திகள்
கோப்பு படம்.

கடலூரில் மனைவியின் கர்ப்பத்தை கலைக்க செய்து கொலை மிரட்டல்- தொழிலாளி உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2021-01-04 12:51 GMT   |   Update On 2021-01-04 12:51 GMT
கடலூரில், மனைவியின் கர்ப்பத்தை கலைக்க செய்து கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் சுப்புராயலுநகரை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பாஸ்கரன் மகன் ரகுராமன் (வயது 27) என்பவரும் கடந்த 2012-ம் ஆண்டு கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தனர். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலிக்க தொடங்கினர். அதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு இருவரும் நாகப்பட்டினத்திற்கு சென்று, அங்கு பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் ரகுராமன், அந்த இளம்பெண் வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தி வந்தார். இதனால் அந்த இளம்பெண் 2 மாத கர்ப்பிணியானார். இதை அறிந்த அவர் தன்னுடைய வீட்டில் தங்கை உள்ளதாகவும், அவருக்கு திருமணம் முடியும் வரை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறி, கர்ப்பத்தை கலைக்க நிர்ப்பந்தப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அவரும் கருக்கலைப்பு செய்தார்.

அதன்பிறகு ரகுராமன், அந்த இளம்பெண்ணிடம் பேசாமலும், அவரது வீட்டுக்கு செல்வதையும் தவிர்த்து விட்டு. தனது பெற்றோருடன் சென்று விட்டார். அங்கு அவருக்கு அவரது பெற்றோர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்தனர். இதை அறிந்த இளம்பெண், ரகுராமன், அவரது தாய் கயல்விழி, தந்தை பாஸ்கரன் ஆகியோரிடம் சென்று நியாயம் கேட்டதாக தெரிகிறது.

அப்போது அவர்கள், வேறு ஒரு பெண்ணை தான் ரகுராமனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று கூறி, வாக்குவாதம் செய்தனர். பின்னர் ரகுராமன், கயல்விழி, பாஸ்கரன், உறவினர் ரஞ்சித் ஆகிய 4 பேரும் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது பற்றி அந்த இளம்பெண் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரகுராமன் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திலும், ரகுராமன் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News