செய்திகள்
சிதம்பரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
சிதம்பரம் அருகே பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் மனமுடைந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பரசன். இவருடைய மகன் பாலாஜி(வயது 22). இவர் தனது பெற்றோரிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய பெற்றோர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த பாலாஜி, வீ்ட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.