செய்திகள்
ஸ்ரீஅபிநவ்

கடலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு சாலை விபத்தில் 302 பேர் பலி

Published On 2021-01-03 17:44 GMT   |   Update On 2021-01-03 17:44 GMT
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 302 பேர் பலியாகி உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கூறினார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்‌கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு ரவுடியிசம் தொடர்பாக 7 கொலைகள் நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2020) ரவுடியிசம் தொடர்பாக கொலைகள் ஏதும் நடக்கவில்லை. இருப்பினும் முன்விரோதம், கள்ளக்காதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 50 கொலைகள் நடந்துள்ளது. 910 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு 113 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 130 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக 77 பேர், குற்ற வழக்கில் தொடர்புடைய 15 பேர், சாராயம் கடத்திய 29 பேர், மணல் கடத்திய 9 பேரும் அடங்குவர்.

310 திருட்டு வழக்குகளில் 267 வழக்குகளில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் 423 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 815 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 302 பேர் சாலை விபத்தில் பலியானார்கள். 2 ஆயிரத்து 602 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த 2019-ம் ஆண்டை விட குறைவாகும்.

2019 -ம் ஆண்டு 4 லட்சத்து 62 ஆயிரத்து 913 மோட்டார் வாகன வழக்குகளும், கடந்த ஆண்டு 4 லட்சத்து 19 ஆயிரத்து 969 மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 12 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் 7 வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய உதவி செய்துள்ளனர். சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிட்டதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 ஆயிரத்து 914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 ஆயிரத்து 194 பேர் கைது செய்யப்பட்டனர். 8 லட்சத்து 28 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 959 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தெரிவித்தார்.
Tags:    

Similar News