செய்திகள்
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு தயார் செய்யும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

பொங்கல் பரிசு தொகுப்புகள் தயார்- கடலூரில் நாளை முதல் வினியோகம்

Published On 2021-01-03 19:18 IST   |   Update On 2021-01-03 19:18:00 IST
கடலூர் மாவட்டத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் வழங்குவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு தயார் நிலையில் உள்ளன.
கடலூர்:

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அகதிகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு முழு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தலா ஒரு கிலோ, முந்திரி, திராட்சை ஆகியவை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராமுடன் ரொக்கமாக ரூ.2 ஆயிரத்து 500 நிதி உதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர் 433 குடும்பங்களுக்கும், 7 லட்சத்து 33 ஆயிரத்து 509 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிதிஉதவி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக கடலூர் சாவடியில் உள்ள கூட்டுறவு கடன் சங்க குடோனில் ஊழியர்கள் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவைகளை துணிப்பைகளில் பொட்டலம் போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த பரிசு தொகுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டுறவு விற்பனை சங்கம், கூட்டுறவு பண்டக சாலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பின்னர் அவை நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News