செய்திகள்
விபத்து

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 175 பேர் பலி

Published On 2021-01-03 15:19 IST   |   Update On 2021-01-03 15:19:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 175 பேர் பலியாகினர். கொரோனா ஊரடங்கால் கடந்த 2019-ம் ஆண்டை விட இறப்பு எண்ணிக்கை குறைந்தது.
புதுக்கோட்டை:

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளை தடுக்க தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. விபத்துகள் எண்ணிக்கையை குறைக்கவும், இறப்பு எண்ணிக்கையை குறைக்கவும் இந்த விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணிதல், கார்களில் சீட் பெல்ட் அணிதல் உள்ளிட்டவை தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அதில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 1, 064 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 165 விபத்துகளில் 175 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல 919 விபத்துகளில் 1, 224 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகள் மொத்தம் 1, 240 பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் 201 விபத்துகளில் 223 பேர் இறந்தனர். 1,039 விபத்துகளில் 1,479 பேர் காயமடைந்திருந்தனர். 2019-ம் ஆண்டுடன் 2020-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டை யாரும் அதிகம் மறந்துவிட முடியாது. இதில் தான் கொரோனா எனும் கொடிய வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, பொதுமக்களின் வாழ்வாதாரமும் சிதைந்து போனது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த பிறப்பிக்க முழு ஊரடங்கினால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது. சாலை விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், கொரோனாவால் உயிர்பலியானவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News