செய்திகள்
யானைகள்

ஓசூர் வனப்பகுதியில் இருந்து கிராமங்களை நோக்கி படையெடுக்கும் 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம்

Published On 2021-01-03 07:05 GMT   |   Update On 2021-01-03 07:05 GMT
யானைகள் கூட்டம் திடீர் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், மற்றும் விவசாயிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய வனப் பகுதிகளில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் இடப் பெயர்ச்சியாகி முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் கூட்டம் பல குழக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளில் சென்று வருகின்றன.

ஓசூர், சானமாவு, ஊடே துர்க்கம், தேனிக்கனிக் கோட்டை, அஞ்செட்டி, அய்யூர் போன்ற பகுதிகளில் பல குழுக்களாக முகாமிட்டு இரவு நேரங்களில் விவசாய பயிர்களான ராகி, காய்கறி, கரும்புகளை காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி வருகின்றன. அதே நேரத்தில் பகல் நேரத்தில் வனப் பகுதிக்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொள்கின்றன.

இந்த நிலையில் நேற்று சானமாவு காட்டில் இருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி சாலையை கடந்து சென்றன.

இதனால் அந்த வழியாக சென்ற லாரிகள், பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், மற்றும் நடந்து செல்பவர்களும் அப்படியே நின்று விட்டனர். அப்போது யானைகள் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இடைவெளி விட்டு கடந்து சென்றன.

இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுமார் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத் துறையினர் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் யானைகளை கர்நாடக மாநில வனப் பகுதிக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே யானைகள் கூட்டம் திடீர் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், மற்றும் விவசாயிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.

இதனால் சானமாவு, பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து பீதியில் இருந்து வருகிறார்கள். மேலும் கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News