செய்திகள்
கோப்பு படம்

பொருட்கள் வாங்காமலேயே குறுந்தகவல்- ரேசன் கடை விற்பனையாளரை சிறைபிடித்த கிராம மக்கள்

Published On 2021-01-01 13:20 IST   |   Update On 2021-01-01 13:20:00 IST
விருத்தாசலம் அருகே பொருட்கள் வாங்காமலேயே குறுந்தகவல் வந்ததால் ரேசன் கடை விற்பனையாளரை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தில் ரேசன் கடை அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர்.

நேற்று காலை அப்பகுதி மக்களுக்கு அரிசி, எண்ண உள்ளிட்ட 5 பொருட்கள் வழங்கப்பட்டதாக குறுஞ் செய்தி வந்துள்ளது. ஆனால் அப்பகுதி மக்கள் பொருட்கள் எதுவும் வாங்காத நிலையில் குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கிராம மக்கள் ரேசன் கடைக்கு வந்தனர்.

அப்போது ரேசன் கடையை திறந்த ஊழியர் சர்க்கரை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு சென்ற அப்பகுதி மக்கள் தங்களது ரேசன் கார்டை எடுத்து சென்று தங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்காமல் எப்படி எங்களுக்கு குருஞ்செய்தி வந்தது எனக் கேட்டு விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரேசன் கடை ஊழியர் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடை விற்பனையாளரை கடையின் உள்ளே வைத்து பூட்டி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் ரேசன் கடை ஊழியரை மீட்டு பொதுமக்களிடம் தங்களுக்கு குறுஞ் செய்தியில் அனுப்பப்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Similar News