செய்திகள்
அலமேலுமங்காபுரத்தில் கணவருடன் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
சத்துவாச்சாரி அருகே அலமேலுமங்காபுரத்தில் கணவருடன் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 5½ பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் வேலப்பாடி முகுந்தன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா (வயது 44). இவர், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் நேற்று ரத்தினகிரியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று விட்டு இரவு 8 மணியளவில் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
சத்துவாச்சாரி அருகே அலமேலுமங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரில் பின்னால் அமர்ந்திருந்தவா் திடீரென வனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியைப் பறித்தார். இதனால் திடுக்கிட்ட வனிதா கூச்சலிட்டார். தங்கச் சங்கிலியை பறித்ததும் மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து வனிதா சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.