செய்திகள்
சாமந்தான்பேட்டையில் மீனவர்கள் மீன்பிடி வலைக்குள் தஞ்சம் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

நாகை அருகே மீனவா்கள் மீன்பிடி வலைக்குள் தஞ்சம் புகுந்து நூதன போராட்டம்

Published On 2020-12-25 15:47 IST   |   Update On 2020-12-25 15:47:00 IST
நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில் மீன் இறங்கு தளம் அமைக்காததை கண்டித்து மீனவா்கள் மீன்பிடி வலைக்குள் தஞ்சம் புகுந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகப்பட்டினம்:

நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு சட்டமன்றத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சாமந்தான்பேட்டை மீனவர்கள், மீன் இறங்கு தளம் அமைக்காததை கண்டித்து சட்டமன்ற தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க போவதாக அறிவித்து கடந்த 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதன்பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இரவில் தீப்பந்தம் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நேற்று முன்தினம் 3-வது நாளாக மீனவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் அறிவிக்கப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை உடனே அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இந்த நிலையில் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடி வலைக்குள் தஞ்சம் புகுந்து நூதன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அந்த மீனவா்கள் கூறுகையில், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு மீன்பிடி இறங்குதளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் நாகை தாலுகா மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Similar News