செய்திகள்
வேதாரண்யம் அருகே தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், விவசாயிகளுடன் கலந்துரையாடிய போது எடுத்த படம்.

வேதாரண்யம் அருகே வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன - எல்.முருகன்

Published On 2020-12-22 16:26 IST   |   Update On 2020-12-22 16:26:00 IST
வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன என வேதாரண்யம் அருகே விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எல்.முருகன் கூறினார்.
வேதாரண்யம்:

வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன என வேதாரண்யம் அருகே விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எல்.முருகன் கூறினார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மருதூர் வடக்கு கிராமத்துக்கு விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பிரசார பயணமாக தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் வந்தார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். 

நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் வரதராஜன், பேட்டை சிவா, மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசும் போது கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக மூன்று வேளாண் திருத்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது. அந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டுள்ளன. 

ஆனால் டெல்லியில் எதிர்க்கட்சிகள், தனிநாடு கோரும் ஒருசில அமைப்புகளுடன் சேர்ந்து எதிர்க்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் விவசாயிகளுக்கு எதிராக நடந்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் நடந்த பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்து காணாமல் போய்விட்டது. இதேபோல தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை விவசாயிகளும், பொதுமக்களும் படுதோல்வி அடைய செய்வார்கள். 

பா.ஜ.க. அரசு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வீதம் 41 லட்சம் விவசாயிகளுக்கு உதவி தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக மோடி அரசு பாடுபட்டு வருகிறது. விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பொய் பிரசாரம் செய்யும் தி.மு.க.விற்கு விவசாயிகள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கட்சியின் பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

Similar News