செய்திகள்
பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி, தங்கம் நகைகள் கொள்ளை
பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியை சேர்ந்தவர்கள் லட்சுமணன் (வயது 62), ரமண பிரியன் (60) சகோதரர்களான இவர்கள் இருவரும் திருச்சி மற்றும் சென்னையில் வசித்து வருகின்றனர். மேலைச்சிவபுரியை சேர்ந்த சரசு என்பவரை வீட்டை பராமிக்க நியமித்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் சரசு பணிகளை முடித்துவிட்டு மாலையில் வீட்டின் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றுள்ளார். பின்னர் மர்ம நபர்கள் சுற்றுச் சுவர் வழியாக ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து 1½ பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு இன்வெர்ட்டர், ஒரு பேட்டரி உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று வி்ட்டனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.