செய்திகள்
நகைகள் திருட்டு

சேத்துப்பட்டு அருகே விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு

Published On 2020-12-15 16:55 IST   |   Update On 2020-12-15 16:55:00 IST
சேத்துப்பட்டு அருகே விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து புகுந்த மர்மநபர்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை துணிகரமாக திருடிச்சென்றுள்ளனர்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அருகே உள்ள சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் தினமும் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று பணிகளை கவனித்து வருகின்றனர். அதன்படி சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் காலையில் வீட்டை பூட்டி விட்டு நிலத்துக்கு சென்றனர்.

அவர்களது 2 மகள்கள் அருகே உள்ள வீட்டில் விளையாடுவதற்காக சென்றிருந்தனர். அவர்கள் விளையாடி விட்டு திரும்பியபோது வீடு திறந்தே கிடந்தது. வயலுக்கு சென்றிருந்த பெற்றோர் வந்து விட்டார்கள் என கருதி உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் கீழே வீசப்பட்டு கிடந்தன. ஆனால் பெற்றோரும் வரவில்லை.

இது குறித்து அவர்கள் பெற்றோரிடம் கூறினர். உடனே அவர்கள் பதற்றத்துடன் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும். இது குறித்து பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசாருடன் சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News