செய்திகள்
அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போடலாம் - கலெக்டர் தகவல்
அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அங்குள்ள பெட்டிகளில் செலுத்தலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்வு நாள் ரத்து செய்யப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெட்டியின் மூலமாக பெறப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் நலன் கருதி தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வைக்கப்படுகின்ற மனுக்கள் பெட்டியில் வரும் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை gdp.tn.gov.in என்ற இணையதளத்திலும், tiruv-a-n-n-a-m-a-l-a-i-p-et-it-i-o-n-b-ox@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மனுக்களாக அனுப்பி வைக்கலாம். திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி கொரோனா ஊரடங்கு காரணமாக எடுக்கப்பட்டு உள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி கேட்டுக்கொண்டு உள்ளார்.