செய்திகள்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சப்-இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்
அசிங்கமாக பேசி மிரட்டிய சப்- இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் ஒருவர் மனு கொடுத்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டை சலமநத்தம் கிராமத்தை சேர்ந்த வெண்மதி (வயது 48) என்பவர் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பெயர் சங்கர். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். எங்களுக்கும் உறவினர்கள் சிலருக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக சிலர் எங்களது உறவினர்களுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். இவர்களில் தூண்டுதலின்பேரில் சம்பவத்தன்று எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு முந்தையநாள் அன்று முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தோம். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தாக்குதலுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முக்கிய காரணம். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் மீண்டும் ஆன்லைனில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று அந்த சப்-இன்ஸ்பெக்டர் கூறினார். மேலும் அவர் அசிங்கமாக பேசி மிரட்டினார். எனவே தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் மற்றும் அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.