செய்திகள்
காஞ்சீபுரத்தில் இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி
காஞ்சீபுரத்தில் இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், அரசன்குப்பம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி லட்சுமி (வயது 30), லோகநாதன் மனைவி லட்சுமியுடன் செங்கல்பட்டு மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
காஞ்சீபுரத்தை அடுத்த நெல்வாய் ஜங்ஷன் என்ற இடத்தில் இவர்கள் வந்தபோது திடீரென ஒரு மாடு குறுக்கே வந்ததால் லோகநாதன் திடீரென்று பிரேக் பிடித்தார். இதில் நிலைதடுமாறிய லட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு பரந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து லோகநாதன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உதயத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் செல்வக்குமார் (27). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (26) என்பவருடன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த ஆம்னி பஸ் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செல்வக்குமார் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பரான மணிமாறன் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோட முயன்ற ஆம்னி பஸ் டிரைவரை சுங்கச்சாவடியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.