செய்திகள்
ஜெகபர் சாதிக்

நாகூர் அருகே வங்கியில் கணினி திருடிய வாலிபர் கைது

Published On 2020-11-01 11:33 GMT   |   Update On 2020-11-01 11:33 GMT
நாகூர் அருகே வங்கியில் கணினி திருடிய தஞ்சையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்:

நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் மெயின் ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கி கிளை கடந்த 3½ ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கி மேலாளர் டார்வின் வங்கியை மூடி விட்டு சென்றுள்ளார். பின்னர் வங்கியை திறக்க துணை மேலாளர் முத்துபிரசாத் வந்துள்ளார். அப்போது பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நாகூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், நாகூர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வங்கியில் உள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் வங்கியின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்ளே வந்து கணினி மற்றும் கீ போர்டு ஆகியவற்றை திருடி சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் தடவியல் நிபுணர்கள் ஜெயசீலன், ரமமணி ஆகியோர் தடயங்களை பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து மோப்ப நாய் துலிப் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் மேலவாஞ்சூர் ரவுண்டானா வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி வந்த பஸ்சில் இருந்து கீழே இறங்கிய நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கல்விகுடி மெயின் ரோட்டை சேர்ந்த ஜெகபர் சாதிக் (வயது 32) என்பதும், வங்கியில் கணினி, கீபோர்டு திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜெகபர் சாதிக்கை கைதுசெய்து, அவரிடம் இருந்த கணினி, கீபோர்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஜெகபர் சாதிக் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News