செய்திகள்
வரி வசூல் தொகை ரூ.2½ லட்சம் மோசடி - ஊராட்சி பெண் செயலாளர் தற்காலிக பணி நீக்கம்
மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் தொகை ரூ.2½ லட்சத்தை மோசடி செய்ததாக ஊராட்சி பெண் செயலாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகரையொட்டி திருவாரூர் சாலையில் பட்டமங்கலம் ஊராட்சி உள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் பல வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால் பட்டமங்கலம் ஊராட்சி வருவாய் ஆதாரம் உள்ள ஊராட்சியாக இருந்து வருகிறது.
இந்த ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தணிக்கை நடந்தது. தணிக்கையின்போது வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரி வருவாய் கடந்த ஒரு ஆண்டாக முறையாக ஊராட்சி கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை துறையினர் மேலும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். ஆய்வில், ஊராட்சியில் போலியாக ரசீது தயார் செய்து வீட்டு வரி, தொழில் வரி வசூல் செய்யப்பட்டு ரூ.2½ லட்சம் வரை மோசடி செய்ததாக அந்த ஊராட்சி செயலாளர் பிரியாவை தற்காலிக பணிநீக்கம் செய்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் போலி பில் தயார் செய்து வரி வசூல் செய்தது தொடர்பான ஆவணங்கள் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பான மேல் நடவடிக்கையை கலெக்டர் மேற்கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.