செய்திகள்
ஏர்வாடி ஊராட்சியில் ஆபத்தான டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஏர்வாடி ஊராட்சியில் ஆபத்தான டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே ஏர்வாடி ஊராட்சி விச்சூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் வழியாக குறும்பூர், மருதாவூர், சித்தம்பல் மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் மெயின் சாலை உள்ளது. திருமருகல் ஒன்றியத்தில் மருதாவூர், சித்தம்பல், விச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்து செல்வதற்கும் அந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
குறும்பூர் பகுதியில் இருந்து மருதாவூர் செல்லும் சாலையில் வயல்வெளிகளில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் சேதமடைந்து மின்கம்பிகள் தாழ்வாக காணப்படுகின்றன. இப்பகுதியில் 20- க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. மேலும் குறும்பூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்கள் சேதம் அடைந்து இரும்பு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் உயிர் சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் செல்கின்றனர்.
தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே வயல்களில் உள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் ஆபத்துகள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் விவசாய பணிகளை செய்ய விவசாயிகள் டிராக்டர், அறுவடை எந்திரம் உள்ளிட்டவைகளை வயலிற்கு கொண்டு செல்லமுடியாமலும் அவதியடைகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான டிரான்ஸ்பார்மர், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மற்றும் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.