செய்திகள்
கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி
கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி எலக்ட்ரீசியன் இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி சங்கரன்பந்தல் கீழ தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் கருணாகரன் (வயது27). நேற்றுமுன்தினம் இவரும், அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வினோத்ராஜ் (26) ஆகியோர் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை கருணாகரன் ஓட்டினார். அப்போது கீழையூர் அருகே ஈசனூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, எதிரே நாகையில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கருணாகரன், வினோத்ராஜ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
மேல்சிகிச்சைக்காக கருணாகரனை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற முத்துப்பேட்டை மார்க்கெட் தெருவைச்சேர்ந்த அப்துல் லத்தீப்பை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.