செய்திகள்
கோப்பு படம்.

செஞ்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

Published On 2020-10-28 06:37 GMT   |   Update On 2020-10-28 06:37 GMT
செஞ்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி நபரை போலீசார் வலைவீசி வருகிறார்கள்.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி கட்டிடத்தில் ஏ.டி.எம். மையமும் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென அபாய ஒலி ஒலித்தது. அபாய ஒலி அடித்தவுடன், அதற்கான குறுந்தகவல் வங்கி அதிகாரியின் செல்போன் எண்ணுக்கு சென்றது. 

இதையடுத்து உஷாரான வங்கி அதிகாரி மற்றும் அபாய ஒலி சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பார்த்தபோது, ஏ.டி.எம். எந்திரம் சேதமடைந்து கிடந்தது. அங்கு யாரும் இல்லை. உடனே வங்கி அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது, முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் இரும்பு ஆயுதம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது அபாய ஒலி ஒலித்தும், இதைத் தொடர்ந்து அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடியிருந்ததும் தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வங்கி காவலாளி இல்லாததையும், தெரு மின்விளக்கு வசதி இல்லாதததையும் நோட்டமிட்ட மர்மநபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருவதோடு, தப்பி ஓடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News