செய்திகள்
மரணம்

சுண்டக்காய் பறிக்க சென்றபோது யானை தாக்கி தொழிலாளி பலி

Published On 2020-10-26 07:33 GMT   |   Update On 2020-10-26 07:33 GMT
சுண்டக்காய் பறிக்க சென்றபோது யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அடுத்த கள்ளிபட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் கிராமம் வேதபாறை மலைவாழ் மக்கள் காலனியை சேர்ந்தவர் ராமன் (வயது 65) கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் வனப்பகுதிக்குள் சுண்டைக்காய் பறிக்க சென்றார்.

இதில் ராமன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் வனப்பகுதியில் அவரை தேடி சென்றனர். அப்போது சன்னகரடு-செங்குட்டை என்ற இடத்தில் தலை நசுங்கிய நிலையில் ராமன் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வனச்சரகர் கணேஷ் பாண்டியன், பங்களாபுதூர் போலீசார் மற்றும் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது யானை மிதித்து ராமன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து டோலி (தொட்டில் கட்டி) மூலம் ராமனின் உடலை சம்பவ இடத்தில் இருந்து மீட்டனர். பின்னர் ராமனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்து ராமனுக்கு மாதம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சுண்டைக்காய் பறிக்க சென்ற ராமனை ஒற்றை யானை துரத்தி சென்று தாக்கியதற்கான தடயங்கள் மற்றும் யானையின் கால் தடங்கள் இருந்ததால் யானை மிதித்து ராமன் இறந்தது தெரிய வந்தது.

யானை நடமாட்டம் அப்பகுதியில் அதிகம் உள்ளதால் இதுபோன்ற சூழலில் ஊர் மக்கள் அடர்ந்த வனத்திற்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News