செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்.

குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் ரூ.33 லட்சம் தங்கம் கடத்தல்

Published On 2020-10-19 19:52 GMT   |   Update On 2020-10-19 19:52 GMT
குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் வந்தன. குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ஜிங்கா சுதாகர் (வயது 40) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் பிரபல நிறுவனத்தின் கிரீம்ஜெல் பாட்டிலில் தங்க துண்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 375 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி (33) என்பவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தலைக்கு பயன்படுத்தும் கிரீம்ஜெல் பாட்டிலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.14 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 270 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 645 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News