செய்திகள்
கடலூர்-திருவந்திபுரம் சாலையில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர்- திருவந்திபுரம் சாலையில் ரூ.17 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணி

Published On 2020-10-19 07:23 GMT   |   Update On 2020-10-19 07:23 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர்-திருவந்திபுரம் செல்லும் சாலையில் ரூ.17 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து திருவந்திபுரம் செல்லும் பிரதான சாலையில் கூத்தப்பாக்கம் கான்வெண்ட் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலையுடன் கூடிய பாலம் கட்ட ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் இருந்து தற்போது பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் ஒரு புறம் பணியும், மற்றொரு புறம் வாகன போக்குவரத்தும் நடைபெற்று வந்தது.

ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்த சாலை தற்காலிகமாக அடைக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதனால் கடலூரில் இருந்து திருவந்திபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் கூத்தப்பாக்கம் சுந்தர்நகர் வழியாகவும், திருவந்தி புரத்தில் இருந்து கடலூர் வரும் வாகனங்கள் தனலட்சுமிநகர், நடேசன்நகர் வழியாக வந்து திருப்பாதிரிப்புலியூர் சரவணாநகர் வழியாகவும் திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையில் நேற்று முன்தினம் பாலம் கட்டும் பணியின் போது அந்த வழியாக சென்ற குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அனைத்தும் வெளியேறி வீணானது. மேலும் பிரதான குடிநீர் குழாய் உடைப்பால் தீபன்நகர், கம்மியம்பேட்டை, காமராஜர்நகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து வருகிறோம். மழை பெய்யாவிட்டால் ஓரிரு நாட்களில் சரி செய்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி விடுவோம் என்றனர்.
Tags:    

Similar News