செய்திகள்
தேர்வு

குரூப்-2 பணி ஆணை வழங்குவதாக பணம் வசூலித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

Published On 2020-10-11 05:07 GMT   |   Update On 2020-10-11 05:07 GMT
குரூப்-2 பணி ஆணை வழங்குவதாக டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை பயன்படுத்தி பணம் வசூலித்து நடந்த மோசடி தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

மதுரை அரசரடி சம்மட்டிபுரம் பாண்டியன் நகர் 2-வது தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சண்முகசுந்தரம். இவரின் மகன் மதுரூபன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வினை எழுதி இருந்தார். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரூபனுக்கு டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து coetnpsc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து இ-மெயில் வந்துள்ளது.

அப்போது சண்முகசுந்தரத்தை தொடர்புகெண்ட சென்னை குன்றத்தூர் கொல்லஞ்சேரி சிவா, சென்னை புளியந்தோப்பு ஆசிர்வாதபுரம் நாகேந்திரராவ், வெங்கடாசலம் ஆகியோர் குரூப்-2 தேர்வில் மதுரூபனை தேர்வு செய்ய வைத்துள்ளதாகவும், இதற்காக ரூ.27 லட்சம் கொடுத்தால் உடனடியாக பணிநியமன ஆணை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் வந்த தகவல் என்பதால் சண்முகசுந்தரம் ஓய்வூதிய பணம் ரூ.11 லட்சம் மற்றும் நிலத்தை அடமானம் வைத்து மீதம் உள்ள பணம் என மொத்தம் ரூ.27 லட்சம் மேற்கண்ட நபர்களிடம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராமேசுவரம் கோவில் அருகில் வைத்து கொடுத்தாராம். இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் வேலைக்கான நியமன ஆணை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதுகுறித்து சண்முகசுந்தரம் கேட்டபோது டி.என்.பி.எஸ்.சி. அதிகாரியிடம் அந்த பணத்தை கொடுத்துவிட்டதாக கூறி ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகசுந்தரம் ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள இ-மெயில் முகவரியை திருட்டுத்தனமாக பயன்படுத்தி மேற்கண்ட மதுரூபன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பியது யார், இதுபோன்று வேறு யாருக்கு அனுப்பி பணம்பெற்றுள்ளனர், இதில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது பற்றி விசாரணை தீவிரமாக நடந்தது.

விசாரணையில், பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து, இந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி இந்தவழக்கினை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் மோசடி தொடர்பாக சிவா, நாகேந்திரன், வெங்கடாசலம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக புகார்தாரர் சண்முகசுந்தரம் நேரில் ஆஜராகி நடந்த விவரங்களையும், மோசடி குறித்த தகவல்களையும் தெரிவிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
Tags:    

Similar News