செய்திகள்
கோப்புபடம்

கூடுதல் பயணிகள் ஏற அனுமதி மறுப்பு - அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

Published On 2020-10-04 15:03 IST   |   Update On 2020-10-04 15:03:00 IST
மஞ்சூர் அருகே கூடுதல் பயணிகள் ஏற அனுமதி மறுத்ததால், அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தப்பட்டது.
மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு கிராமத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் தங்காடு வழியாக ஊட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. அதில் டிரைவர், கண்டக்டர் மற்றும் சுமார் 25 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் ஆவர். கன்னேரி, தங்காடு ஆகிய நிறுத்தங்களில் பஸ் நின்றது. அப்போது 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் ஏற முயன்றனர். ஆனால் அதற்கு டிரைவர் மற்றும் கண்டக்டர் அனுமதி மறுத்தனர். கொரோனா தொற்று பரவி வருவதால், குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என்று தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் காத்தாடிமட்டம் நிறுத்தத்தில் இறங்கி கொள்வதாக கூறினர். ஆனால் அவர் ஊட்டிக்கு செல்ல வேண்டியவர்கள் ஆவர். தொடர்ந்து அவர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது. காத்தாடிமட்டம் நிறுத்தம் வந்ததும், பஸ்சில் இருந்து அந்த பயணிகள் இறங்கவில்லை. தொடர்ந்து ஊட்டிக்கு பஸ்சை இயக்கும்படி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, பயணிகளை கீழே இறங்க கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் ஊட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எடக்காட்டில் இருந்து ஊட்டிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதே பஸ்சில் அவர்கள் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

Similar News