செய்திகள்
வழக்கு பதிவு

தடையை மீறி கிராம சபை கூட்டம்: 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 295 பேர் மீது வழக்கு

Published On 2020-10-04 05:28 GMT   |   Update On 2020-10-04 05:28 GMT
தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன் உள்பட 295 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கொரோனா பரவி வரும் நிலையில், தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமையில், கிருஷ்ணகிரி ஒன்றியம், கங்கலேரி மற்றும் பெரியமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவதானப்பட்டி ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

அதேபோல், குருபரப்பள்ளி அடுத்த பில்லனகுப்பம் பகுதியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் வேப்பனப்பள்ளி பி.முருகன் எம்.எல்.ஏ. மற்றும் ஊராட்சி தலைவர் சிவராஜ் ஆகியோர் தலைமையில், கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள். இதே போல காவேரிப்பட்டணம் ஒன்றியம், சவுட்டஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் மற்றும் பர்கூர் ஒன்றியம், காரகுப்பம் அடுத்த சமாதான நகர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலும், கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட மொத்தம் 295 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 125 பேர் பெண்கள் ஆவார்கள்.
Tags:    

Similar News