செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரியில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை- கலெக்டர் தகவல்

Published On 2020-09-29 09:14 GMT   |   Update On 2020-09-29 09:14 GMT
அரசு பஸ் டிரைவர்கள் இரட்டை முக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 3 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று பாதித்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாலும், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர தினமும் 150 இ பாஸ் வழங்கப்படுகிறது. வைரஸ் பரவலை தடுக்க தினமும் 1, 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று அதிகம் பேருக்கு உறுதி செய்யப்படுவதால் பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற நாட்களில் ஒரு நாளைக்கு 2, 000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் முககவசம் அணிந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும். அருகே உள்ள மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. பொதுமக்கள் உறவினர்களை சென்று சந்திப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சுற்றுலா பயணிகள் வந்தாலும், உள்ளூர் மக்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுவது முக்கியமான ஒன்றாகும். ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தால் வர அனுமதிக்கப்படுகிறார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக வருகிறவர்கள் இ பாஸ் எடுத்து வர வேண்டும். உள்ளூர் மக்கள் ஆதார் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். பொதுமக்கள் என்று கூறி சுற்றுலா பயணிகள் இ பாஸ் இல்லாமல் வருவது தெரியவந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ் இயக்கப்பட்டு வருவதால் பஸ்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டமாக ஏறக்கூடாது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பஸ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். டிரைவர்கள், கண்டக்டர்கள் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் சுற்றுலா தொழிலாளர்கள் நலிவடைந்து உள்ளதை கருத்தில் கொண்டு கூடுதலாக இ பாஸ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் கோவிட் கேர் சென்டர்கள் அதிகரிக்கப்பட்டதோடு, படுக்கை வசதிகளும் போதுமான அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. எஸ்டேட் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. வைரஸ் உறுதியானவர்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஊக்குவிக்கப்படுகிறது. அவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News