செய்திகள்
மா மீனாட்சி சுந்தரம்

வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மா.மீனாட்சி சுந்தரம் மரணம்

Published On 2020-09-22 07:12 IST   |   Update On 2020-09-22 07:12:00 IST
வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தை சேர்ந்தவர் மா.மீனாட்சி சுந்தரம்(வயது 84). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி சுந்தரம் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் வேதாரண்யத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தி.மு.க. நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் மீனாட்சி சுந்தரம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு அவர் பிறந்த ஊரான ஆயக்காரன்புலத்தில் உள்ள அவரது அண்ணன் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த மா.மீனாட்சி சுந்தரம் வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், வேதாரண்யம் நகரசபை தலைவராகவும், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் இவருக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.

மரணம் அடைந்த மீனாட்சி சுந்தரத்துக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், புகழேந்தி, அன்பரசு ஆகிய மகன்களும் உள்ளனர்.

Similar News