செய்திகள்
அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு ரூ.5-க்கு முக கவசங்கள் விற்பனை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published On 2020-09-08 07:13 GMT   |   Update On 2020-09-08 07:13 GMT
அரசு பேருந்துகளில் முக கவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு கண்டக்டர்கள் மூலம் ரூ.5-க்கு முக கவசம் வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர்:

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டதையடுத்து, கரூர் பஸ் நிலையத்தில், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு கொரோனா தொற்றினை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டங்களுக்கிடையே இயக்கப்பட்ட பஸ்கள், முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க போக்குவரத்துக்கழகத்தின் மூலம் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து பஸ்களிலும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.

டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது. பேஸ் ஷீல்டு எனப்படும் முகத்தை பாதுகாக்கும் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பஸ்சில் முக கவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு கண்டக்டர்கள் மூலம் ரூ.5-க்கு முக கவசம் வழங்கப்படுகிறது.

பொதுமக்களின் தேவைக்கேற்ப பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத்துறையின் அனைத்து மண்டலங்களிலும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது அப்போது மாவட்ட கலெக்டர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் என்.எஸ்.பால சுப்பிரமணியன், போக்குவரத்துத்துறை மண்டல மேலாளர் குணசேகரன், கரூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் திருவிகா, கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைத் தலைவர் வை.நெடுஞ்செழியன், நகர இளைஞரணி செயலாளர் சேரன் பழனிச்சாமி, ஸ்ரீடிராவல்ஸ் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News