செய்திகள்
பரப்பலாறு அணை

தொடர் மழையால் பரப்பலாறு அணை நீர்மட்டம் உயர்வு

Published On 2020-09-07 10:18 GMT   |   Update On 2020-09-07 10:18 GMT
தொடர் மழையால் பரப்பலாறு அணை நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்துள்ளது.
சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணை மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 33 வார்டுகள், விருப்பாச்சி, கள்ளிமந்தயம், பாச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் அணை நிரம்பி குளங்கள் மூலம் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 3 ஆண்டுகளாக போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் உயராமலேயே இருந்தது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போது மழை கைகொடுத்ததால் 90 அடி உயரம் உள்ள பரப்பலாறு அணை நீர்மட்டம் 65 அடி வரை உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணை தூர்வாரப்படாததால் 20 அடி வரை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மழை காலத்திற்கு முன்பாகவே அணையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News