செய்திகள்
ரஜினிகாந்த்

கட்சி தொடங்கும் தேதியை ரஜினிகாந்த் முடிவு செய்யவில்லை- உயர்மட்ட நிர்வாகி தகவல்

Published On 2020-09-05 07:22 IST   |   Update On 2020-09-05 07:22:00 IST
மக்கள் எழுச்சி வந்த பிறகே முழு அரசியலுக்கு வருவார் என்றும், ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் உயர்மட்ட நிர்வாகி தெரிவித்தார்.
சென்னை:

ரஜினி மக்கள் மன்றத்தின் உயர்மட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என்று சுறுசுறுப்பாக தேனீ போல உழைக்க தயாராகும் தொண்டர் கூட்டம் காத்து நிற்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் ஏற்கனவே கூறியதுபோல, அவர் அறிமுகம் செய்ய நினைப்பது புதிய அரசியல் மாற்றம். அதற்கு மக்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி வர வேண்டும்.

அந்த எழுச்சியும் சாதாரணமாக இருக்கக்கூடாது. ஒட்டுமொத்த மக்களிடமும் எழுச்சி ஏற்பட வேண்டும். அத்தகைய எழுச்சி வர வேண்டும் என்றால், அவர் மக்கள் மத்தியில் போய் மாநாடுகளை நடத்தி ஊர் ஊராக போய் பிரசாரம் செய்யவேண்டும். அதை செய்தால்தான், அவர் நினைக்கிற எழுச்சி வரக்கூடும். அப்படி அவர் செய்ய வேண்டும் என்றால், கொரோனா பரவல் குறைய வேண்டும். அதற்கு 4 சுவர்களுக்குள் உட்கார்ந்து கொண்டு அந்த எழுச்சியை சமூக வலைதளங்கள், இணையதளங்கள் மூலமாக நிச்சயம் கொண்டுவர முடியாது என்பது அவரது உறுதியான எண்ணம்.

ரஜினிகாந்த் அரசியலுக்குள் வந்தால் மக்கள் எழுச்சி உறுதியாக பெருமளவில் இருக்கும் என்றநிலை ஏற்பட வேண்டும். அவர் நிச்சயமாக வெற்றிக் குதிரையாக வரவேண்டும். அப்படியொரு நிலை இல்லை என்றால், இந்த வயதில் அவர் அதைப்பற்றி யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும். கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர இன்னும் குறையவில்லை.

தன் தொண்டர்கள், ரசிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில், அவர் அதிக அக்கறையோடு இருக்கிறார். அவர்கள் மீது மட்டற்ற அன்புகொண்டிருக்கிறார். இந்தநிலையில், கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், சமூக இடைவெளி நிச்சயமாக பின்பற்றப்படவேண்டும். அத்தகைய சூழ்நிலையில் கட்சியை தொடங்கிவிட்டால் உற்சாகம் உள்ள தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக கொடியேற்றுவதிலும், கிளை அலுவலகங்களை தொடங்குவதிலும் ஈடுபடுவார்கள்.

அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அப்படியொரு நிலைமை தன்னை நம்பிவரும் யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது அவரது உறுதியான எண்ணம். முதலில் உயிர்தான், முதலில் கொரோனா தொற்று பாதிக்காத உடல்நிலைதான் என்பதே அவருடைய உறுதியான நிலைப்பாடு.

அவர் அரசியலுக்குள் நுழைந்தால் ‘வின்னர்’ ஆகத்தான் இருப்பார், ‘ரன்னர்’ ஆக இருக்கமாட்டார் என்றநிலை, திட்டவட்டமாக ஏற்பட்டுவிட்டது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டால்தான் முழுமையாக அரசியல் களத்தில் இறங்குவது பற்றி அவர் யோசிக்க முடியும். ‘வின்னர்’ ஆக இல்லை என்றால், இந்த வயதில் அவர் அரசியலுக்குள் வரவேண்டிய அவசியமே இல்லையே?.

அதற்கு ஏற்ற வகையில் ஒரு சுனாமி போல எழுச்சி ஏற்பட வேண்டும். இதையெல்லாம் கொரோனா தொற்று குறைந்த பிறகு விரிவாக ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பார். அந்த அறிவிப்பை அவர் வெளியிடும் வரையில் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இப்போது கட்சியை தொடங்குகிறார்?, அப்போது கட்சியை தொடங்குகிறார்? என்று அவரிடம் இருந்து அறிவிப்பு வரும் வரையில் வெளியாகும் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

மேற்கண்டவாறு அந்த உயர்மட்ட நிர்வாகி தெரிவித்தார்.

Similar News