புதுக்கோட்டையில் முகநூல் பக்கத்தில் தேசியக்கொடியை அவமதித்து கருத்து பதிவிட்டவர் கைது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டவுன் காமராஜபுரம் 5-ம் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வரும் இவர் தமிழர் கழகம் என்ற அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் ஆகஸ்டு 15-ந்தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினம் குறித்து தவறான தகவல்களையும், பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையிலும் இந்திய தேசியக்கொடியை அவமதிக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பிறரை தூண்டும் வகையிலும் தகவல்களை பதிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் காமராஜ் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் விசாரணை நடத்தி, தேசியக்கொடியை அவமதித்து முக நூலில் கருத்து பதிவிட்ட மணிகண்டன் மீது, தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட மணிகண்டன் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.