செய்திகள்
கைப்பற்றப்பட்ட பொம்மை துப்பாக்கி- செந்தில்குமார்

பெரம்பூரில் வீடு புகுந்து பெண்ணிடம் துப்பாக்கி முனையில் மிரட்டல்- வாலிபர் கைது

Published On 2020-09-03 09:14 IST   |   Update On 2020-09-03 09:14:00 IST
பெரம்பூரில் வீடு புகுந்து பெண்ணிடம் பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர்:

சென்னை பெரம்பூர் பட்டேல் சாலையில் வாலிபர்கள் 2 பேர் கையில் துப்பாக்கியுடன் நேற்று மாலை ஒரு வீட்டில் புகுந்து பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். உடனே அந்த பெண் சுதாரித்து அவர்களை தள்ளிவிட்டு கதவை அடைத்து கூச்சல் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுற்றி வளைத்து அதில் ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேந்திரன், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அதில், பிடிபட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் செந்தில்குமார் (வயது 32) என்பதும், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து பரிசோதித்த போது, அது பொம்மை துப்பாக்கி எனவும் தெரியவந்தது.

பிடிபட்ட நபர் திருமணமாகி குடும்பத்துடன் வியாசர்பாடியில் உள்ள சாஸ்திரி நகரில் வசித்து வந்த நிலையில், வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் வியாபாரத்தில் வருமானமின்றி தவித்து வந்த அவர், நண்பருடன் சேர்ந்து பொம்மை துப்பாக்கியை காட்டி வீட்டிற்குள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றது விசாரணையில் உறுதியானது. மேலும் அவரை கைது செய்த போலீசார், அவருடன் திருட முயன்றவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூரில் வீடு புகுந்து பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News