மூச்சுத்திணறி 3 நோயாளிகள் அடுத்தடுத்து பலி: மருத்துவ கல்லூரிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 6,167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4,860 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். 1,206 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 101 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 3 நோயாளிகள் கடந்த 22-ந்தேதி 20 நிமிடத்திற்குள் அடுத்தடுத்து இறந்து போனார்கள். 70 வயதுடைய 2 முதியவர்கள் மற்றும் 75 வயது மூதாட்டி ஒருவர் இந்த சம்பவத்தில் இறந்தனர்.
இதில் கடந்த 21-ந்தேதி 2 முதியவர்களும், அதற்கு முந்தய நாள் அந்த மூதாட்டியும் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
3 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர்களுக்கு முறையாக செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை. ஆகையினால் இறப்பு நிகழ்ந்தது என குற்றஞ்சாட்டினர். இந்த தகவல் மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு மருத்துவ கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 3 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அன்றைய தினம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மயக்க மருந்தியல் துறை தலைவரிடம் நடந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்க கடிதம் கேட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சீனியர் டாக்டர் ஒருவர் கூறும்போது, இறந்த 3 பேருக்கு சிறுநீரகக்கோளாறு இருந்தது. அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது என கூறினார். கல்லூரி டீன் டாக்டர் பூவதி தெரிவிக்கையில், 3 பேரும் இணை நோய்கள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக கூறினார்.