செய்திகள்
அரசின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேர் பணி நீக்கம்
விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்:
விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து ரூ.4¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு, விவசாயிகளுக்கான பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தை(3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்) கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரை சுமார் 1 லட்சத்து 79 ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து பயன்பெற்று வந்தனர்.
இதற்கிடையில் விடுபட்ட விவசாயிகளை இந்த திட்டத்தில் சேர்க்க இணைய தளத்தில் மத்திய அரசு சில எளிய மாற்றங்களை செய்தது. இதை பயன்படுத்தி கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ந்தேதி வரை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 752 பேர் கிசான் நிதிஉதவி திட்டத்தில் சேர்ந்தனர். இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் சேர்ந்து உதவித்தொகை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, இது தொடர்பாக விரிவாக விசாரிக்க குறுவட்ட அளவில் கண்காணிப்பு குழுவை அமைத்தார். அந்த குழுவினர் 1.4.2020-க்கு பிறகு பதிவேற்றம் செய்த 80 ஆயிரத்து 752 பேர் விவசாயிகளா? என்று கள ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் 37 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்று தெரிந்தது. மேலும் அவர்களை விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் சேர்த்த அட்மா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் போலி ஆவணம் கொடுத்து விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் சேர்ந்த 37 ஆயிரம் பேருடைய வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டன. தொடர்ந்து விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்பப்பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மாவட்டத்தில் விவசாயிகள் வங்கிக்கணக்கு வைத்துள்ள 226 வங்கிகளின் கிளைதோறும் ஒவ்வொருவராக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், 226 வங்கி கிளைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து இதுவரை ரூ.4 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர். அதில் சிலர் ஒரு தவணையும், சிலர் 2 தவணையும் பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வங்கிக்கணக்கில் பணம் பெற்றவர்கள், வேறு வங்கி கணக்கு வைத்திருந்தால் அதில் இருந்து பணத்தை பறிமுதல் செய்யவும் வருவாய்த்துறை, போலீசார் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேறு வங்கி கணக்கு இல்லாதவர்களிடம் நேரிடையாக சென்றும் பணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கிடையில் இந்த திட்டத்தில் பணி திறமை இல்லாத மேலும் 10 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.