செய்திகள்
கொரோனா சிறப்பு வார்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

144 படுக்கைகளுடன் மேலும் ஒரு கொரோனா சிறப்பு வார்டு- மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு

Published On 2020-08-31 13:00 IST   |   Update On 2020-08-31 13:00:00 IST
அண்ணாமலைநகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் 144 படுக்கைகளுடன் மேலும் ஒரு கொரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணியை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.
அண்ணாமலைநகர்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்கள், அறிகுறி உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரி முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதி மற்றும் டைமண்ட் ஜூப்ளி விடுதி ஆகியவற்றில் 200-க்கும் மேற்பட்டடோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவாங்கூர் விடுதியையும் 144 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் நேற்று காலை அண்ணாமலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ள கோல்டன் ஜூப்ளி மற்றும் டைமண்ட் ஜூப்ளி விடுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதிதாக கொரோனா வார்டாக அமைய உள்ள திருவாங்கூர் விடுதியையும் அவர் பார்வையிட்டார்.

முன்னதாக கோல்டன் ஜூப்ளி விடுதியில் நேற்று காலை நோயாளிகளுக்கு சூப் வழங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், டாக்டர் வினோத், வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Similar News