செய்திகள்
கோப்புப்படம்

சாலை மறியல் செய்த கொரோனா நோயாளிகளை கண்டு பொது மக்கள் ஓட்டம்

Published On 2020-08-29 19:34 IST   |   Update On 2020-08-29 19:34:00 IST
கடலூர் அருகே சாலை மறியல் செய்த கொரோனா நோயாளிகளை கண்டு பொது மக்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரானோ தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் அருகே குமராபுரம் தனியார் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு தனியார் கல்லூரியில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று சிகிச்சை மையத்தில் இருந்து கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சரியான முறையில் சாப்பாடு வசதிகள் ஏற்படுத்தவில்லை. நேரத்திற்கு சாப்பாடு வருவதில்லை, டாக்டர்கள் சிகிச்சை அளிக்க சரியான முறையில் வரவில்லை என கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தவர்களை கொரானோவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் யார்? என்று தெரியாமல் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நின்று கொண்டிருந்தனர்.

அதன் பிறகு கொரானோ சிகிச்சை சரியான முறையில் அளிக்கவில்லை என கூறியதை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக அவர்களை கடக்காமல் பதட்டத்துடன் உடனடியாக சென்றனர். மேலும் அங்கு நின்றிருந்த ஒரு சில பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கொரானோவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிறிது நேரத்தில் தங்கள் கோரிக்கைகளை பொதுமக்களிடம் தெரிவித்துக்கொண்டு சிகிச்சை மையத்திற்கு சென்றனர்.

தகவல் அறிந்த கடலூர் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் நெல்லிக்குப்பம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது தங்களுக்கு சாப்பாடு நேரத்திற்கு தரமாக வழங்க வேண்டும். டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

மேலும் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் உயர் அதிகாரியிடம் தெரிவித்து உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Similar News