செய்திகள்
கல்லணை கால்வாய் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூண் இடிந்து விழுந்துள்ளதை படத்தில் காணலாம்.

அறந்தாங்கி அருகே கல்லணை கால்வாய் பாலம் உடைந்தது- சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2020-08-19 13:17 IST   |   Update On 2020-08-19 13:17:00 IST
அறந்தாங்கி அருகே கல்லணை கால்வாய் பாலம் உடைந்தது. இந்த பாலத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே ஆயிங்குடி வடக்கில் கல்லணை கால்வாயில் பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 1935-ம் ஆண்டு கட்டப்பட்டது. மேற்பனைக்காடு, ஆயிங்குடி வடக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூண் நேற்று முன்தினம் திடீரென்று இடிந்து விழுந்தது.

அப்போது, பாலத்தில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இதையடுத்து முன்எச்சரிக்கையாக பாலத்தில் யாரும் செல்லாத வகையில் பாலத்தில்மரங்களை போட்டு தடுப்பு அமைத்துள்ளனர். இதன்காரணமாக வயல்பகுதிக்கு உழவு பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதைஅறிந்த ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி சண்முகநாதன் நேற்று உடைந்த பாலத்தை பார்வையிட்டனர். அப்போது, இந்த பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேமங்குடி கிழக்கு பகுதியில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்த போது பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. விவசாயிகள் நீண்ட நேரம் போராடி அந்த உடைப்பை சரி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News