செய்திகள்
கண்காணிப்புக்குழு கூட்டம் குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்தபோது எடுத்த படம்.

மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- கனிமொழி எம்.பி. அறிவுறுத்தல்

Published On 2020-08-15 08:34 GMT   |   Update On 2020-08-15 08:34 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் நடந்தது.

கூட்டத்துக்கு குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன்(தூத்துக்குடி), அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்(திருச்செந்தூர்), சண்முகையா(ஓட்டப்பிடாரம்), தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், குழு உறுப்பினர் செயலாளருமான சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 35 துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்கள் கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி, மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் வினியோகம், சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மத்திய அரசின் அனைத்து திட்ட பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி கூடுதல் கலெக்டர்(வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News